ADDED : மார் 29, 2026 02:32 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், 2,379 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது. இவற்றில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், அலுவலர்களுக்கு நேற்று, முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லுாரி, மேற்கு தொகுதிக்கு கொங்கு கல்வி நிலைய மேல்நிலை பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடிக்கு சென்றதும் செய்ய வேண்டிய வழிமுறை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து விளக்கம் அளித்து, கடைபிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து அறிவுறுத்தப்பட்டது. பயிற்சி முகாம் நடந்த இடத்தில் மாதிரி ஓட்டுசாவடி மையம் அமைக்கப்பட்டு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. கோபி தொகுதிக்கான முகாம், கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. முகாமை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.
மொடக்குறிச்சி தொகுதிக்கான முகாம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, பெருந்துறை தொகுதிக்கான முகாம் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பவானி தொகுதிக்கான முகாம் பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, அந்தியூர் தொகுதிக்கான முகாம் அந்தியூர் மங்களம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பவானிசாகர் (தனி) தொகுதிக்கான முகாம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரியிலும் நடந்தது.
