த.வெ.க., வேட்பாளர் மனுவில் குளறுபடி: நா.த.க., குற்றச்சாட்டு
த.வெ.க., வேட்பாளர் மனுவில் குளறுபடி: நா.த.க., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 08, 2026 06:24 AM
ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகமான, மாநகராட்சி அலுவலகத்தில், வேட்பு மனு பரிசீலனை நேற்று நடந்தது. இதில் தவெக வேட்பாளர் பாலாஜி தாக்கல் செய்த அபிடவிட்டில், குளறுபடி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறியதாவது: பாலாஜி தனது அபிடவிட்டில், மகள் பெயரில், 78 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பாக அசையும் சொத்து, அசையா சொத்து, பூர்வீக சொத்து, நகைகள், வாகனம் என எதுவும் மகளின் பெயரில் இல்லை என கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் முரண்பாடாக உள்ளது.
இதேபோல் பாலாஜி பெயரில் சுயமாக வாங்கிய சொத்து மதிப்பு மற்றும் மேம்பாட்டு பணிக்கான மதிப்பாக, 78.77 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மொத்த மதிப்பில், 80 ஆயிரம் என கூறியுள்ளார். இந்த குளறுபடிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்களும் பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். ஆனாலும் பாலாஜி வேட்புமனு ஏற்கப்பட்டது. வரும் காலத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் இந்த பதிவுகளை சமர்பிப்போம். இவ்வாறு கூறினர்.
