டாஸ்மாக் கடைக்கு சரக்குடன் வந்த வாகனம் சிறைபிடிப்பு
டாஸ்மாக் கடைக்கு சரக்குடன் வந்த வாகனம் சிறைபிடிப்பு
ADDED : மே 24, 2026 05:21 AM

பவானி: அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடையை மூடக்கோரி பலமுறை புகார் செய்தும் பலனில்லாத நிலையில், கடந்த, 15ம் தேதி கடை முன், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மேலாளர் ரகுநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் கடையில் இருக்கும் சரக்குகளை விற்று விட்டு நிரந்தரமாக மூடுவதாக உறுதியளிக்கவே, மறியலை கைவிட்டனர். இந்நிலையில் பூனாச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, வாகனத்தில் நேற்று மது வகை கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து, மது ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டனர்.
அம்மாபேட்டை போலீசார், டாஸ்மாக் கடை ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிமேல் கடை திறக்கப்படாது என உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர் -- அம்மாபேட்டை சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
