ADDED : அக் 23, 2024 07:08 AM
ஈரோடு: ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி வளாகம், அதை சுற்றிய பகுதிகள், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பனியன் மார்க்கெட்களிலும், ஜவுளிச்சந்தை வியாபாரம் களை கட்டியது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு முழுவதும் சென்ட்ரல் மார்க்கெட்டும், அதை ஒட்டிய சாலை, நடைபாதை, வாகனங்களில் வைத்தும் விடியவிடிய ஜவுளி சந்தை விற்பனை அமோகமாக நடந்தது. நேற்று அதிகாலை முதல் காலை, 8:30 மணி வரை கனமழை பெய்த நிலையில் காலை, 9:00 மணிக்கு மேல் மீண்டும் சந்தை கூடியது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, மஹராஷ்டிரா உட்பட பல்வேறு பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கனி மார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகள், மணிக்கூண்டு சாலை, காந்திஜி சாலை, மார்க்கெட் பகுதி, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி உட்பட பிற பகுதிகளில் உள்ள பனியன் மார்க்கெட்டிலும் கூட்டம் களை கட்டியது.
வியாபாரிகள் கூறுகையில், 'மழை ஒருபுறம் தொல்லை கொடுத்தாலும், இந்தாண்டு மொத்த விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது. சில்லறை விற்பனை ஒரு வாரமாக அதிகரித்து நேற்று மேலும் உயர்ந்தது,' என்றனர்.
