புதிய எம்.எல்.ஏ.,வை வரவேற்கதயாராகும் மேற்கு அலுவலகம்
புதிய எம்.எல்.ஏ.,வை வரவேற்கதயாராகும் மேற்கு அலுவலகம்
ADDED : மே 14, 2026 06:19 AM

ஈரோடு:ஈரோடு பழையபாளையத்தில் உள்ள, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில், 8 தொகுதியில், 5ல் த.வெ.க., - 3ல் அ.தி.மு.க., வென்றது. முதல்வராக விஜய் பதவியேற்று, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வென்றுள்ளார். கடந்த, 4ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் சென்னை சென்ற எம்.எல்.ஏ.,க்கள் வார இறுதியில் ஈரோடு திரும்ப உள்ளனர். இச்சூழலில் ஈரோட்டில் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் கடந்த, தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துசாமியால் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடந்தது. தற்போது பொதுப்பணித்துறையினர் அந்த அலுவலகத்தை திறந்து, நேற்று சுத்தம் செய்தனர்.
இதுபற்றி, அதிகாரிகள் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று அவரவர் தொகுதி அலுவலகத்துக்கு வர உள்ளனர். அலுவலகத்தை தயார் செய்கிறோம். மேற்கு தொகுதி அலுவலகத்துக்கு, 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு பெறப்பட்டு, கழிப்பறை, மற்றொரு அறை கதவு சீரமைக்கப்படுகிறது. முழுமையாக பெயின்ட் செய்து, தரைத்தளம் பாலிஷ் செய்யப்படும். சுற்றுப்பகுதியை சுத்தம் செய்து, மின் விளக்குகள் அமைக்கப்படும். வாகன நிறுத்தம், உள்ளே - வெளியே செல்லும் வாயில் சீரமைக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி அலுவலகம், சூரம்பட்டி நாலு ரோடு அருகே உள்ளது. அக்கட்டடம் மிகவும் பழுதாகி உள்ளதால், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
சென்டிமென்டால் நிறுத்தமாஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்படுத்திய தி.மு.க.,வின் என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் என்.கே.கே.பி.ராஜா போன்றோர் அரசியலில் ஒதுங்கி உள்ளனர். அ.தி.மு.க.,வில் வென்ற தென்னரசு, உடல் நலம் பாதித்து, மீண்டும் வாய்ப்பு தரப்படாமல் ஒதுங்கி உள்ளார். கடந்த, 2011ல் தே.மு.தி.க.,வில்
எம்.எல்.ஏ.,வான வி.சி.சந்திரகுமார், அப்போதைய முதல்வர் ஜெ., உடனான மோதலால், 3 ஆண்டுக்கு மேல் சஸ்பெண்ட், பிற நடவடிக்கை, அலுவலகத்துக்கு 'சீல்' என சென்றதுடன், 2016ல் தே.மு.தி.க.,வை உடைத்து வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்து, தேர்தலில் தோல்வியை சந்தித்தார். கடந்த, 2025ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ.,வாக, 13 மாதம் செயல்பட்டு, மீண்டும் வாய்ப்பின்றி முடங்கி உள்ளார்.
முன்னதாக, 2021ல் இத்தொகுதியில் வென்ற திருமகன் ஈவெரா, 2023ல் வென்ற அவரது தந்தை இளங்கோவன் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்தனர். இவ்வாறாக இந்த அலுவலகத்தின் மோசமான சென்ட்டிமென்ட்டால், தற்போது மராமத்துப்பணி செய்யப்படாமல் உள்ளது. கிழக்கு எம்.எல்.ஏ.,வாக வென்ற த.வெ.க., விஜய் பாலாஜிக்கு, வேறு இடம் வழங்கப்படும். இவ்விடத்தை இடித்து அகற்ற
வாய்ப்புள்ளது, என, அதிகாரி கள் கூறுகின்றனர்.
