தொகுதியில் சறுக்கியது எங்கே? பூத் வாரியாக அலசும் ஏஜென்டுகள்
தொகுதியில் சறுக்கியது எங்கே? பூத் வாரியாக அலசும் ஏஜென்டுகள்
ADDED : மே 06, 2026 04:20 AM
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
தொகுதியில் பதிவான ஓட்டுகளை ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து,
சறுக்கியது எங்கே என்பதை, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
பவானிசாகர்
(தனி) சட்டசபை தொகுதியில், ஆண் வாக்காளர், 1,14,697; பெண் 1,22,893,
மூன்றாம் பாலினத்தவர், 23 என, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 613 பேர்
உள்ளனர். இதில், 1 லட்சத்து, 3,251 ஆண்கள், 1 லட்சத்து, 9,064 பெண்கள்,
18 மூன்றாம் பாலினத்தவர் என, இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 313 பேர்
ஓட்டளித்தனர். இது, 89.40 சதவீதமாகும். ஓட்டு எண்ணிக்கையில்
த.வெ.க., வேட்பாளர் தமிழ்செல்வி, அ.தி.மு.க.,வின் பண்ணாரியை விட, 4,569
வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஓட்டு எண்ணிக்கையில்,
16வது சுற்று வரை முன்னிலை வகித்த பண்ணாரி, 17வது சுற்றில் பின்னடைவு
காண துவங்கினார். அதன் பின் தமிழ்செல்வி முன்னிலை பெற்று, 24வது இறுதி
சுற்றில், 72,391 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க.,வின் பண்ணாரி, 67,822
வாக்குகள், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இ.கம்யூ., சுந்தரம்,
63,107 வாக்குகள் பெற்றனர்.
பறிகொடுத்த அ.தி.மு.க.,
பவானிசாகர்
தொகுதியை பொறுத்தவரை, 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க.,
வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் த.வெ.க.,விடம் தொகுதியை பறி
கொடுத்தது. இந்நிலையில் பவானிசாகர் தொகுதியில் பதிவான ஓட்டுகளை
ஓட்டுச்சாவடி வாரியாக பிரித்து, சறுக்கியது எங்கே என்பதை,
தோல்வியடைந்த கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் ஆராய்ந்து வருகின்றனர்.
குறிப்பாக
பூத் ஏஜன்ட்டுகளாக பணிபுரிந்தவர்கள், தங்களது பட்டியலில்
வட்டமிட்டு வைத்திருக்கும் வேட்பாளர் பெயர்களை வைத்து, கூட்டி
கழித்துப் பார்க்கின்றனர். வார்டு வாரியாக எத்தனை ஓட்டு
பதிவாகியிருக்கிறது; யார் எந்த கட்சிக்கு ஓட்டளித்திருப்பார்
என்பது உட்பட பல்வேறு அம்சங்களையும் அலசுகின்றனர். பட்டியலில்
புதிதாக சேர்ந்திருக்கும் வாக்காளர்கள் யார், யார், அதில் முதல்முறை
ஓட்டளிப்பவர்கள் யார் யார், அரசியல் கட்சிகள் சாராதவர்கள் என
தனித்தனியாக பிரித்து, சறுக்கியது எங்கே என கூட்டல் கழித்தல்
கணக்குகளை, கட்சி அலுவலகத்தில் அமர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
