ADDED : ஜூன் 25, 2026 04:24 AM
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பவானிசாகர் அடுத்த பெரியகள்ளிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பெரியகள்ளிப்பட்டி, முருகன் நகர், கோட்டைபுதுார் உள்ளிட்ட கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, பவானிசாகர் அணையிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் குடிநீரின்றி அவதிக்கு ஆளாகினர்.
இதனால், ஆவேசமடைந்த பெண்கள் நேற்று காலை முறையாக குடிநீர் வழங்க கோரி, சத்தி மேட்டுப்பாளையம் சாலையில் கோட்டைப்புதுார் போலீஸ் செக்போஸ்ட் முன், காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியே சென்ற வாகனங்கள், மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன. பவானிசாகர் போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத மக்கள், தொடர்ந்து
மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் பி.டி.ஓ., செந்தில்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலால்,அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
