/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரும்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
/
பெரும்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
பெரும்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
பெரும்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 10, 2025 02:02 AM
ஈரோடு; ஈரோடு மாநகரில் செல்லும் பெரும்பள்ளம் ஓடை, 12 கி.மீ., நீளம் கொண்டது. ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழை நீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.
முறையான பராமரிப்பு இல்லாததால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்புகளின் கழிவுநீர், குப்பை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. மழை நீர் வடிகாலாக இருந்த பெரும்பள்ளம் ஓடை சாக்கடையாக மாறியது.
இந்நிலையில் பெரும்பள்ளம் ஓடையை சீரமைத்து பொலிவுபடுத்த, மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 200.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திண்டலை அடுத்த கதிரம்பட்டி காரப்பாறையில் இருந்து வெண்டிபாளையம் காவிரி ஆறு வரை ஓடையை சீரமைக்கும் பணி, 2019ல் துவங்கியது. ஆறு பகுதியாக பிரிக்கப்பட்டு, ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தற்போது இருபுறமும் கான்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஓடையில், 327 எண்ணிக்கையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும், ஓடையின் பாதுகாப்பு கருதி, 8.05 கி.மீ., துாரத்துக்கு கம்பி வலை தடுப்புகளும், 25 இடங்களில் நீர் சரிவு அமைப்புகளும், ஓடையின் பக்கவாட்டு பகுதிகளில் நான்கு இடங்களில் பூங்காக்களும், 2.4 கி.மீ. நீளத்தில் இணைப்பு சாலை போடப்பட்டு வருகிறது.
ஓடையின் இருபுறங்களிலும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளை இணைக்கும் வகையில் செங்கோடம்பள்ளம், 80 அடி சாலை, காரைவாய்க்கால் உட்பட நான்கு இடங்களில் பாலங்களை அமைக்கும் பணிகள் நடக்கிறது. பணியை ஜூன் இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஓடை சீரமைப்பு பணி ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் முதல், இரண்டாம் பகுதிகளில் 90 சதவீதம், மூன்று, நான்காம் பகுதிகளில் 75 சதவீதம், ஐந்து, ஆறாம் பகுதிகளில் 80 சதவீத பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பள்ளம் ஓடையில் துார்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. இது முடிந்ததும் ஓடைக்குள் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். தற்போது இ.வி.என்., சாலை ஸ்டோனி பாலம் அருகில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

