காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி? வன கிராமத்தில் மக்கள் போராட்டம்
காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி? வன கிராமத்தில் மக்கள் போராட்டம்
ADDED : பிப் 09, 2024 11:06 AM
புன்செய்புளியம்பட்டி: அடர்ந்த வனப்பகுதி கிராமத்தில் காட்டெருமை தாக்கி பலியானவரின் சடலத்தை எடுக்க விடாமல், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த காராச்சிக்கொரை கிராமத்தை சேர்ந்தவர் குமார், 40; பைக் மெக்கானிக்கான இவர், அவ்வப்போது கூலி வேலைக்கு செல்வார். பவானிசாகரை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில், நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்துக்கு, சிமெண்ட் சீட் கூரை அமைக்கும் வேலைக்காக, குமார் நேற்று முன்தினம் சென்றார். இரவு அங்கேயே தங்கியிருந்த குமார், நேற்று காலை தெங்குமரஹாடா கிராமத்தில் சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் நடமாடிய எருமை, குமாரை கொம்பால் குத்தி வீசியது. இதில் படுகாயமடைந்தவரை மக்கள் மீட்டு, ஏங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே இறந்தார்.
இதையறிந்த அவரது உறவினர்கள், 30க்கும் மேற்பட்டோர் தெங்குமரஹாடா கிராமத்துக்கு சென்றனர். வன கிராம மக்கள், குமாரை குத்திக் கொன்றது காட்டெருமை என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த குமாரின் உறவினர்கள் மற்றும் தெங்குமரஹாடா ஊர் மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் அமர்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டெருமை தாக்கி உயிரிழந்ததால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த ஒருமாத காலமாக கிராமத்துக்குள் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை ஊருக்குள் நுழையாமல் தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
கோத்தகிரி தாசில்தார் கோமதி, இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, தெங்குமரஹாடா வனச்சரகர் தீன தயாளன் பேச்சுவார்த்தை நடத்தினர். குமாரை கொன்றது காட்டெருமை இல்லை; ஊர் எருமைதான் என்று அதிகாரிகள் கூறவே, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து உறுதி அளிக்காவிட்டால், சடலத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி, மாலை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார், அதிகாரிகள் தொடர்ந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
