ADDED : நவ 27, 2025 02:16 AM
தாராபுரம், தாராபுரம் அருகே, சரக்கு வாங்கி தருவதாக கூறி, முதியவரை கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொட்டாப்புளிபாளையம் சாலையில், பத்மாவதி நகர் அருகே கடந்த, 17ல், மயங்கிய நிலையில் கிடந்த முதியவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, தாராபுரம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இறந்தவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த பசுபதி, 60, என்பதும், தாராபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்ததும் தெரியவந்தது. கொட்டாபுளிப்பாளையம் சாலையில், அவர் உடல் கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் சென்ற பசுபதி, அங்கிருந்த டாஸ்மாக் கடை பாரில், மது அருந்தியதும், அப்போது அங்கு பழக்கமான, தாராபுரம் பழைய ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த யாசர் அராபத், 24, கட்டிங் தருவதாக கூறி பைக்கில் பசுபதியை அழைத்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த யாசர் அராபத்தை, போலீசார் கைது செய்து விசாரித்ததில், பசுபதியிடம் இருந்த, 1,700 ரூபாயை யாசர் அராபத் பறித்த போது, கைகலப்பு ஏற்பட்டதால், பசுபதியின் கழுத்தில், காலை வைத்து நசுக்கி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, யாசர் அராபத்தை போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

