ADDED : ஏப் 08, 2026 06:21 AM
ஈரோடு ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் ரிஷாந்த், 20; போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையானவர். பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க, நாமக்கல்லில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் சேர்த்தனர்.
ஒரு மாதத்துக்கு முன் வெளியேறி, மீண்டும் பழக்கத்தை தொடர்ந்தார். இதனால் குடும்பத்தினர் பிடித்து மீண்டும் அதே மறுவாழ்வு மையத்தில் கட்டணம் செலுத்தி சேர்த்தனர். அங்கிருந்து தப்பி ஈரோடு எஸ்.பி,. அலுவலகத்துக்கு நேற்று மதியம், 2:00 மணியளவில் ரிஷாந்த் வந்தார்.
அவரை பின் தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் மறுவாழ்வு மைய ஊழியர்கள் காரில் வந்தனர். வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மரத்தை கட்டிப்பிடித்து கொண்டு ரிஷாந்த் செல்ல மறுத்தார். நீண்ட நேரமாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.
ரிஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் பேசினர். பின் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று பேசி முடிவெடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து ரிஷாந்த், அவரது குடும்பத்தினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் எஸ்.பி., அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நில்வியது.
