ADDED : ஆக 07, 2025 01:31 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே, வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டி.என். பாளையம் அருகே பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட, தாசப்பகவுண்டன் புதுார் பகுதியில் தாழ முனியப்பன் கோவில் செல்லும் சாலை உள்ளது. அதன் வழியாக நேற்று காலை வேலைக்கு சென்ற சிலர், மயானத்தின் முன்புறம் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக, பங்களாபுதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், கொலை நடந்த இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஜம்பு பள்ளம் என்ற இடத்தில் மதுக்கடை உள்ளதால், அங்கு வருபவர்கள் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு மயானம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இதே போன்று பார்த்திபன், 26, பர்கூர் அருகே சுண்டப்பூரை சேர்ந்த நாகராஜ், 26, மேலும் சிலர் மது அருந்தியதும், அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில், நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து, பார்த்திபன் மற்றும் சிலரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.