/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரம் கலந்த தண்ணீர் குடித்த 13 ஆடுகள் பரிதாப பலி
/
உரம் கலந்த தண்ணீர் குடித்த 13 ஆடுகள் பரிதாப பலி
ADDED : ஏப் 15, 2024 06:13 AM

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே உரம் கலந்த தண்ணீரை குடித்த 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி ரேகா, 30; விவசாய கூலித்தொழிலாளி.
இவர் தனது 13 ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள விளைநில பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம்.
நேற்று, தனது ஆடுகளை ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் தொட்டியில் இருந்த தண்ணீரை ஆடுகள் குடித்தன.
சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கரும்பு பயிருக்கு சொட்டுநீர் மூலம் உரம் விடுவதற்காக, தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பதும், அந்த தண்ணீரை குடித்ததால் ஆடுகள் இறந்ததும் தெரியவந்தது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

