/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ்சில் 13 கிலோ கஞ்சா கடத்தல்; உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
/
அரசு பஸ்சில் 13 கிலோ கஞ்சா கடத்தல்; உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
அரசு பஸ்சில் 13 கிலோ கஞ்சா கடத்தல்; உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
அரசு பஸ்சில் 13 கிலோ கஞ்சா கடத்தல்; உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
ADDED : மார் 22, 2024 05:58 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரின் அதிரடி சோதனையில், அரசு விரைவு பஸ்சில் கடத்திச் சென்ற 13 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பரிந்தல் பகுதியில் ஆசானுார்- எலவனாசூர்கோட்டை சாலையில் நேற்று பகல் 12.10 மணியளவில் முரளி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சை (டிஎன்.01, ஏஎன்.1939) நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் லக்கேஜ் வைக்கும் பகுதியில் தலா அரை கிலோ எடை கொண்ட 26 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், தேனி அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் கிருஷ்ணன், 27; பெரம்பலுார் மாவட்டம் குன்னம் அடுத்த காடூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக், 27; ஆகிய இருவரும் கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் வாங்கி தேனிக்கு விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு குழுவினர், பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிடிபட்ட கிருஷ்ணன், கார்த்திக் ஆகிய இருவரையும் அவர்கள் கடத்தி வந்த கஞ்சாவையும் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அலெக்சிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணன், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

