/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரம்
ADDED : ஜூலை 02, 2024 06:23 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள், கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பிறந்தநாள், புதிய திரைப்படம் ரிலீஸ், திருமணம், வலைகாப்பு, திருவிழா உள்ளிட்ட சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காக 'டிஜிட்டல் பேனர்' வைக்கப்படுகிறது. 'பேனர்' வைக்க எவ்வித விதிமுறையும் இல்லை.
இதனால் விளம்பர பதாகை வைப்பவர்கள் தங்களது நிதிநிலைக்கேற்ப பல்வேறு அளவுகளில் 'பேனர்' அச்சடித்து, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வைக்கின்றனர்.
இதில், கிராமப்புறங்களில் வைக்கப்படும் 'பேனர்'களால் பெரும்பாலான தொந்தரவுகள் இல்லை. ஆனால், நகர பகுதியில் முக்கிய இடங்களில் வைக்கப்படும் 'பேனரால்' போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக, பலத்த காற்று வீசும் போது 'பேனர்' விழுவதால் உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்கிறது.
இதையொட்டி, டிஜிட்டல் பேனர் வைக்க உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய்த்துறையிடம் தடையில்லா சான்று பெறுவதுடன், காவல்துறை அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விதிமுறைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பின்பற்றுவதில்லை.
இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'டிஜிட்டல் பேனர்' கலாசாரம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, சாலையின் குறுக்கே வைக்கப்படும் 'யு' வடிவ ஆர்ச்சுகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
சின்னசேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றினால், சாலையோரத்தில் இருந்த பேனர் அவ்வழியாக சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சிறுவன் எவ்வித காயமுமின்றி தப்பினார்.
இதையடுத்து அனுமதி பெறாமல் பேனர் வைத்ததாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், முடியனுார் பஸ்நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி பிறந்தநாள் பேனர் வைத்ததாக ஒருவர் மீது வரஞ்சரம் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்தனர். அசம்பாத நிகழ்வுகள் நடைபெறும் போது மட்டும் நடவடிக்கை எடுக்கும் போலீசார், மற்ற சமயங்களில் அதை கண்டுகொள்வதில்லை.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'டிஜிட்டல் பேனர்' வைப்பவர்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும். அனுமதி பெறாமல் பேனர் வைக்கும் பட்சத்தில், அரசியல் பிரமுகர்கள் உட்பட பாரபட்சமின்றி அனைவர் மீதும் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே 'பேனர்' கலாசாரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.