/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நெறிப்படுத்த நடவடிக்கை தேவை
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நெறிப்படுத்த நடவடிக்கை தேவை
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நெறிப்படுத்த நடவடிக்கை தேவை
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நெறிப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : ஆக 26, 2024 05:16 AM
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பணிகள் பயனற்றவையாகவே உள்ளதால் அதனை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வ வேலைகளை செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டு துவக்கப்பட்டது. கிராம ஊராட்சிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது. கிராம ஊராட்சிகளில் உள்ள பொது சொத்துகளை உருவாக்குவதற்கு இத்திட்டம் பயன்படுகிறது.
நீர்நிலைகள் மேம்பாடு, காடு, மரம் வளர்ப்பு, பாசன கால்வாய்கள், சிறுபாசன பணிகள், பண்ணை குளம், தோட்டம் அமைத்தல், தரிசு நில மேம்பாடு, வெள்ள கால்வாய்களை ஆழப்படுத்துதல், மண்புழு உரம், திரவ உயிர் உரங்கள் தயாரிப்பு, கால்நடை, கோழி, ஆடு, தங்குமிடம் அமைத்தல், மீன்வளம் தொடர்பான பணிகள், தனிநபர் கழிப்பறை, திடக்கழிவு மேலாண்மை பணிகள், அங்கன்வாடி மையம் கட்டுதல், விளையாட்டு மைதானங்களில் கட்டுமானங்கள், உணவு தானிய சேமிப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
கிராம ஊராட்சியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் ஒரு நாள் சம்பளமாக 374 ரூபாய் அந்தந்த பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு வாரந்தோறும் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் பெரும்பாலானவை ஆக்கபூர்வமாக இல்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. வேலைக்கு வராமலேயே பலரின் பெயர்களை போலியாக சேர்த்து சம்பளம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் பணி நடைபெறும் இடத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூடுகின்றனர். ஆனால் ஒப்புக்கு சிறிது நேரம் பணிகளை செய்துவிட்டு பல மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு வீட்டிற்கு செல்கின்றனர்.
இதனால் எந்தப் பணியும் தரமானதாகவும் நீண்ட நாள் நிலைக்கும் வகையில் அமைவதில்லை.அதேபோல் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது சவாலாக உள்ளது.
மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தற்போது உள்ளதை விட அதிகமான தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கலெக்டர் பிரசாந்த் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்ற அளவு பணிகள் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர் வாருவதும், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த மண் கொட்டப்படும் பணிகள்தான் பெரும்பாலும் நடக்கிறது.
இப்பணிகள் அனைத்தும் கடமைக்கு மேற்கொள்ளப்படுவதால் எந்தப் பயனும் இன்றி அரசு பணம் விரயமாகி வருகிறது.
அரசு கட்டடங்கள், தடுப்பணைகள், உலர்களம் அமைத்தல், கிராமப்புற சாலைகள் போடுதல், நீர்நிலை தேக்க தொட்டிகள் கட்டுதல், ஏரி மதகுகள் புதுப்பித்தல், கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தினால் மட்டுமே அவை ஆக்கபூர்வமாக அமையும்.
-நமது நிருபர்-