/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் கடை அருகே அறிவுரை மையம் கமலஹாசனுக்கு தோன்றிய புதிய சிந்தனை
/
டாஸ்மாக் கடை அருகே அறிவுரை மையம் கமலஹாசனுக்கு தோன்றிய புதிய சிந்தனை
டாஸ்மாக் கடை அருகே அறிவுரை மையம் கமலஹாசனுக்கு தோன்றிய புதிய சிந்தனை
டாஸ்மாக் கடை அருகே அறிவுரை மையம் கமலஹாசனுக்கு தோன்றிய புதிய சிந்தனை
ADDED : ஜூன் 24, 2024 04:56 AM

கள்ளக்குறிச்சி, : 'குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள், உயிர்தான் முக்கியம் எனும் அறிவுரை செய்யும் இடங்கள், டாஸ்மாக் பக்கத்திலேயே இருக்க வேண்டும்' என மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் சந்தித்து, நலம் விசாரித்தார். தொடர்ந்து, கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இச்சம்பவத்தை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவோ பார்ப்பதை விட, நம் எல்லாருக்கும் ஒரு கடமை உள்ளது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் 'கள்ளுண்ணாமை' பற்றி இருக்கிறது என்றால், அப்போது முதல் இருந்துள்ளது என அர்த்தம். அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை மக்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
சாராய வியாபாரம் செய்யும் எந்த அரசாக இருந்தாலும் அதில் இருந்து வரும் வருமானத்தின் ஒரு பகுதியை கண்டிப்பாக இதற்கு ஒதுக்கி, மனோதத்துவ ரீதியாக மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
சாலையில் விபத்து நடப்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தையும் குறைக்கவும் முடியாது. அதுபோல், நிறைய ஆலைகளில் பெரிய அளவில் மது தயார் செய்கிறார்கள். அதற்கு கடைகளும் வைத்திருக்கிறார்கள். ஒரு தெருவில் மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளன.
மது குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட மிதமாக குடியுங்கள், உங்கள் உயிர்தான் முக்கியம் எனும் அறிவுரை செய்யும் இடங்கள், டாஸ்மாக் பக்கத்திலேயே இருக்க வேண்டும்.
உடனடியாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து. அமெரிக்காவில் மதுவிலக்கு பரிபூரணமாக கொண்டுவந்த போது, மாபியா அதிகமாகி இருக்கிறது. இதுதான் உலகம் கற்றுக் கொண்ட பாடம்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.