/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீக்குளிப்பு முயற்சி: 4 பேர் கைது
/
தீக்குளிப்பு முயற்சி: 4 பேர் கைது
ADDED : மார் 07, 2025 11:27 PM

திருக்கோவிலுார்: பட்டா பிரச்சனை தொடர்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கீரனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; இவருக்கு கடந்த, 2006,ல் நில உடைமை மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்து, அரசு இடத்திற்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த இடத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பதாகவும், ரத்து செய்யவும், சந்தப்பேட்டையைச் சேர்ந்த மோகன் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ.,விடம் மனு செய்தார். இது குறித்து சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், இரு தரப்பினரிடமும் விசாரித்து, ஏழுமலைக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, பழைய நிலையே தொடர உத்தவிட்டார்.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதைக்கண்டித்து, ஏழுமலை, அவரது மனைவி மகாலட்சுமி,38; மகன் தயாநிதிமாறன், 18; மகள் பிரீத்தி ஸ்ரீ,13; ஆகிய நால்வரும், நேற்று காலை 11:00 மணியளவில், திருக்கோவிலுார் சப் கலெக்டர் அலுவலகம் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். அலுவலக ஊழியர்கள், போலீசார் அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து நால்வரும் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பணி செய்யவிடாமல் தடுப்பதாக வருவாய் துறை அலுவலர்களின் புகாரைத் தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார், நால்வரையும் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.