/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம்? வீடியோ வைரலால் பரபரப்பு
/
மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம்? வீடியோ வைரலால் பரபரப்பு
மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம்? வீடியோ வைரலால் பரபரப்பு
மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம்? வீடியோ வைரலால் பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:00 AM
திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் லஞ்சம் பெறுவதாக வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையம், சந்தைப்பேட்டை, டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ளது. இதன் காவல் எல்லை சங்கராபுரம் வரை உள்ளது. இதன் காரணமாக தினசரி 5க்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது.
இதனை விசாரிக்க போலீசார் மதியத்திற்கு பிறகு இரு தரப்பினரையும் வரவழைப்பதால் மாலை நேரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கூட்டம் களைகட்டும்.
ஒரு பக்கம் கட்ட பஞ்சாயத்து, மறுபக்கம் போலீசாரின் அவதுாறு பேச்சுகள் என புகார் அளித்தவர்களும், எதிர் தரப்பினரும் மனவேதனையில் நிற்பதை காண முடியும்.
இருதரப்பினரும் குறிப்பிட்ட புரோக்கர்களை அழைத்து வந்தால் தான் இந்த காவல் நிலையத்திற்குள்ளேயே நுழைய முடியும் என்ற குற்றச்சாட்டு வேறு உள்ளது.
டி.எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகிலேயே தினசரி நடக்கும் இந்த கூத்தை தட்டி கேட்பது யார் என்ற ஆதங்கம் அவ்வழியாக செல்பவர்கள் மட்டுமல்ல, நேர்மையான போலீஸ் அதிகாரிகளையும் புலம்ப வைக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு மப்டியில் இருக்கும் பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒருவர் பணம் கொடுப்பது போன்றும், நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என கூறி விட்டு, இது என்ன பெண் தரப்பா? பையன் தரப்பா? என அந்த போலீஸ் அதிகாரி கேட்டுவிட்டு, பணத்தை மற்றொரு போலீசாரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொடுக்குமாறு கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டதாகவும், தற்போது இதனை யாரோ வேண்டுமென்றே கசிய விட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டாலும், இதன் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.