கார் தீ பிடித்து எரிந்து சேதம் நெடுஞ்சாலையில் பரபரப்பு
கார் தீ பிடித்து எரிந்து சேதம் நெடுஞ்சாலையில் பரபரப்பு
ADDED : ஜூலை 12, 2026 09:12 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சின்னசேலம், காந்தி நகரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் தீபன், 29; இவர், நேற்று மதியம் 3:30 மணியளவில் இந்திலியில் இருந்து வோக்ஸ் வேகன் வெண்டோ காரில் தனது தந்தை அருணாசலம், தம்பி விஜய் ஆகியோருடன் சின்னசேலத்திற்கு சென்றார்.
சேலம் – உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பங்காரம் அருகே சென்ற போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதைப்பார்த்த தீபன் உடனடியாக சாலையோரமாக காரை நிறுத்தி, மூவரும் இறங்கினர். உடன் காரின் முன்பகுதி தீ பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில், ஆனந்தகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
