/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழாவிற்கு தயார்
/
முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழாவிற்கு தயார்
ADDED : பிப் 22, 2025 07:16 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் முதல்வர் மருந்தகத்தை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 7, தனியார் நிர்வாகம் 8 என மொத்தம் 15 முதல்வர் மருந்தகங்கள் உள்ளன. தரமான மருந்துகளை, அடக்க விலையில் இருந்து, 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்து பொதுமக்களுக்கு வழங்குவது இந்த மருந்தகத்தின் நோக்கம்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலைய முதல்வர் மருந்தகம், நேப்பால் தெரு, முதல்வர் மருந்தக மொத்த சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது செயல்பாடுகள், அரசு உதவிகள், மருந்துகளின் தரம் மற்றும் விற்பனை, திட்ட அனுமதி, திறப்பு விழா பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், 'மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க ஆன்லைன் மூலம் 36 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியற்ற, 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 21 மனுக்கள் ஏற்கப்பட்டன.
கூட்டுறவுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், பகண்டைகூட்ரோடு, மணலுார்பேட்டை, வடக்கனந்தல், எலவனாசூர்கோட்டை ஆகிய, 7 இடங்களிலும், தொழில் முனைவோர் சார்பில், 8 இடங்களிலும் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் வரும், 24ம் தேதி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். பொதுமக்கள் முதல்வர் மருந்தகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
ஆய்வின் போது திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன், கள்ளக்குறிச்சி துணை பதிவாளர் சுகந்த லதா உட்பட பலர் உடனிருந்தனர்.