/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிகாரிகளின் மெத்தனத்தால் கழிவுநீர் தேக்கமான சித்தேரி
/
அதிகாரிகளின் மெத்தனத்தால் கழிவுநீர் தேக்கமான சித்தேரி
அதிகாரிகளின் மெத்தனத்தால் கழிவுநீர் தேக்கமான சித்தேரி
அதிகாரிகளின் மெத்தனத்தால் கழிவுநீர் தேக்கமான சித்தேரி
ADDED : மே 21, 2024 05:59 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் கழிவுநீர் தேக்கமாக மாறிவிட்ட சித்தேரியில் நீர் நிறம் மாறியதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித் துறையின் கட்டுபாட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான சித்தேரி உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு பெரியேரியின் உபரி நீர் வரத்து உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வரத்து வாய்க்கால்கள் முழுதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது.
அத்துடன் ஏரிக்கரையோரங்களில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால், ஏரியின் தண்ணீர் மாசடைந்து பச்சை நிறமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீரும் விஷமாகி சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கையால், இந்த ஏரியில் குப்பை கொட்டப்படுவது தடுக்கப்பட்டது. மேலும் இதன் உள்ளிருந்து 100 டன்னுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் வரத்து வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே நீடிக்கிறது.
நகராட்சி நிர்வாகத்தின் கவனமின்மையால் கழிவுநீர் கலப்பதும், குப்பைகள் கொட்டப்படுவதும் தடுக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதியின் போர்வெல், கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் உள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள நீர் ஆதாரத்தையே கவனிக்காமல் விட்டுவிட்டதால், விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகி போகும் நிலை இருந்து வருகிறது.
எனவே, சீர்கெட்டு கிடக்கும் சித்தேரியில் கலந்துள்ள கழிவுகளை அகற்றுவதுடன், வாய்க்கால் கரைகளை சீர் செய்யவும், இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் துார் வாரி சரி செய்திடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

