/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தல்
/
விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தல்
ADDED : ஆக 30, 2024 12:21 AM

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று ஊர் பொது இடத்திலும், விநாயகர் கோவிலுக்கு முன்பும் பிரம்மாண்டமான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர்.
பின், ஓரிரு நாட்களில் விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, குளங்கள், அணைகள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம். விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்தாண்டு வரும் செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, பிரதிஷ்டை மற்றும் கரைப்பது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
களிமண் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர் நிலைகள் பாதிக்காத வண்ணம் இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது. சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது.
அதேபோல், பூஜைகளின் போது ஒருமுறை பயன்படுத்தி துாக்கியெறிய கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை அலங்கரிக்க ஒருமுறை உபயோகித்து துாக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ராசாய பொருட்களை பயன்படுத்த கூடாது.
மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும். அனுமதியில்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.