/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி மீண்டும்... துவங்கியது; ரூ.139.41 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி மீண்டும்... துவங்கியது; ரூ.139.41 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி மீண்டும்... துவங்கியது; ரூ.139.41 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி மீண்டும்... துவங்கியது; ரூ.139.41 கோடியில் பிரமாண்டமாக அமைகிறது
ADDED : செப் 17, 2024 06:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு இரண்டாம் முறையாக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சி கடந்த 2019ம் ஆண்டு நவ., 26ம் தேதி தனி மாவட்டமாக உதயமாகியது.
தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் மார்க்கெட் கமிட்டி வளாகத்திலும், எஸ்.பி., அலுவலகம் உலகங்காத்தான் அருகே தனியார் கல்வி நிறுவனத்திலும் இயங்கி வருகிறது.
நிரந்தர கலெக்டர் அலுவலக வளாகம் அமைப்பதற்கு, கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராம எல்லையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35.18 ஏக்கர் பரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு அக்.,22ம் தேதி கலெக்டர் அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.
இதற்கிடையே கோவில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளை துவங்க, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை சென்று திரும்பியது. பின், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
அதில் கோவில் இடத்தை குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம். நிரந்தரமாக்க கூடாது, மாத வாடகையாக ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்து கலெக்டர் அலுவலகம் கட்டடத்திற்கு அனுமதி வழங்கி கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கூடுதல் நிதியுடன் ரூ.139.41 கோடியில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
புதிய கலெக்டர் அலுவலகம் 8 தளங்களை கொண்டு கட்டப்படுகிறது.
முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குனர் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் டி.ஆர்.ஓ., அலுவலகம், சமூக நலத்துறை, பள்ளி நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், கனிமவள உதவி இயக்குனர் அலுவலகம் அமைப்படுகிறது.
மூன்றாம் தளத்தில் கலெக்டர் அறை, கூட்ட அரங்கம், காணொளி காட்சி, கலந்தாய்வு அறை, வருவாய் துறை அலுவலகம் என தொடர்ந்து ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு அரசு துறைகளின் பல்வேறு மாவட்ட அலுவலகங்களுடன் கட்டப்படுகிறது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கண்காணிப்பு பொறியாளர் பருதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஹேமா, உதவி செயற்பொறியாளர் மாலா, உதவிப் பொறியாளர் ஹிமாம் செரிப், ஒன்றிய சேர்மன் தாமோதிரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., வாக்குவாதம்
கலெக்டர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்குமார், விழா முடிந்த பின் பொதுப்பணித்துறை பெண் அதிகாரியிடம், தனக்கு ஏன் முறைப்படி அழைப்பில்லை எனக் கேட்டு கடிந்து கொண்டார்.
இங்கு வைத்துள்ள விளம்பர போர்டுகளிலும் தொகுதி எம்.எல்.ஏ.,வான எனது பெயர் இடம் பெறவில்லை. பல தடங்கலுக்கு பின் பணிகள் துவங்கியுள்ளதால் அமைதியாக இருந்தேன். பிரச்னை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அதனால் தான் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தேன், என கடிந்து கொண்டார்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.