/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் தொடரும் சாராய விற்பனை
/
கள்ளக்குறிச்சியில் தொடரும் சாராய விற்பனை
ADDED : செப் 03, 2024 06:39 AM

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையிலும் சாராயம் விற்பனை தொடர்கிறது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கலெக்டர், எஸ்.பி., மற்றும் போலீசார் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புதிதாக பலரும் பணியமர்த்தப்பட்டனர். ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
போலீசாரின் சிறப்பு பிரிவுகள் விசாரணையை தொடர்ந்து வருகிறது. மேலும் சாராய வழக்கில் பலரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சிறிது நாட்கள் மட்டுமே கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துக்களின் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையும், விபசாரமும் பல இடங்களில் தலை காட்ட துவங்கி உள்ளது. என்னதான் கலெக்டர், எஸ்.பி.,யை மாற்றினாலும், கமிஷன்கள் அமைத்தாலும், குற்றம் செய்பவர்கள் திருந்தாவிட்டால் இதனை தடுக்க முடியாது என்ற நிலையே கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து வருகிறது. இது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
-நமது நிருபர்-