/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசனுாரில் குறுகலாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை மேம்பாலம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல் 'நகாய்' அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
/
ஆசனுாரில் குறுகலாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை மேம்பாலம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல் 'நகாய்' அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
ஆசனுாரில் குறுகலாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை மேம்பாலம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல் 'நகாய்' அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
ஆசனுாரில் குறுகலாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை மேம்பாலம் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல் 'நகாய்' அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
ADDED : செப் 13, 2024 06:13 AM

தியாகதுருகம்: உளுந்துார்பேட்டை - திருச்சி நான்கு வழிச்சாலையில், ஆசனுாரில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் ஆசனுார் அமைந்துள்ளது. வேலுாரில் இருந்து திருவண்ணாமலை, திருக்கோவிலுார், எலவனாசூர்கோட்டை வழியே திருச்சி செல்லும் சாலை ஆசனுாரில் நான்கு வழிச்சாலையுடன் இணைகிறது.
எலவனாசூர்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நான்குவழி சாலையில் நுழையும் போது விபத்து ஏற்படாமல் இருக்க, 2 கி.மீ., தொலைவிற்கு சர்வீஸ் சாலையில் சென்று, நான்கு வழி சாலையின் எதிர்ப்புற சாலைக்கு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
இருப்பினும் இவ்விடத்தில் அடிக்கடி விபத்து நடந்ததால், ஆசனுார் பஸ் நிறுத்தத்தில் மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையஅதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு எஸ்.எஸ்., கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம் டெண்டர் எடுத்து மேம்பாலம் கட்டும் பணிகளை துவக்கியது. கட்டுமானத்திற்கு இடையூறின்றி வாகனங்கள் செல்ல வசதியாக சர்வீஸ் சாலை மட்டும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பணிகளை தொடராமல் அந்நிறுவனம் கைவிட்டது.
இதையடுத்து, ஏ.இ.சி., புரமோக் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதே இடத்தில் பாலம் கட்டுவதற்கு, ரூ.12.5 கோடிக்கு மறு ஒப்பந்தம் பெற்று, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகளை துவக்கியது.
மேம்பால சுவற்றையொட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை அகலம் குறைவாக உள்ளது. இதனால், வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் வேகம் குறைவாக செல்லும் போது, பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தார்சாலையை ஒட்டி உள்ள மண் சாலையில் வாகனங்கள் இறங்கி செல்லாத வகையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கற்களை வரிசையாக அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
அதேபோல், எலவனாசூர்கோட்டை சாலை சந்திப்பு அருகில் செயல்படாத சிக்னல் கம்பம், கட்சி கொடி கம்பங்கள் இருப்பது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நத்தை போல ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இங்கு தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தார்சாலையை ஒட்டி 10 அடி அகலத்திற்கு உள்ள மண் பாதையை அகலப்படுத்தி, தார்சாலையாக அமைத்தால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். இங்கு இடையூறாக உள்ள சிக்னல் கம்பம் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றினால் வாகனங்கள் நெருக்கடியின்றி விரைவாக கடந்து செல்ல முடியும்.
பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து தொய்வின்றி நடந்து வரும் நிலையில் அடுத்த மாத இறுதியில் பணிகள் பூர்த்தியடைந்து வாகன போக்குவரத்திற்கு மேம்பாலம் திறந்து விடப்படும் என தெரிகிறது. அதுவரை வாகனங்கள் தடையின்றி செல்ல சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மழைக்காலம் என்பதாலும், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் போக்குவரத்து சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலையான இங்கு போக்குவரத்து அதிகம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஆசனுார் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி வாகனங்கள் இடையூறின்றி செல்ல தரமான சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.