/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஆக 06, 2024 06:54 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டை நகராட்சியில் ரேஷன் கடையை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு, விநியோகம், தரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் மதிப்பிலான சமுத்திரகுளம் துார்வாரும் பணியை பார்வையிட்டார். பின்னர் திருநாவலுார் அடுத்த மதியனுார் கிராமத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயிரிட்டுள்ள பசுந்தாள் உர விதை சாகுபடி வயல், சேந்தமங்கலம் ஊராட்சியில் மேற்கொண்டுள்ள கிராம சாலை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார்.
தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை உரிய விதிமுறைகளின் படி தரமாகவும், விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், நகராட்சி கமிஷனர் இளவரசன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.