/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
/
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஏப் 29, 2024 05:23 AM
கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ்', ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'நீட்' மாதிரி தேர்வில், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்கள் 'நீட்' தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து 'நீட்' மாதிரி தேர்வை நடத்தியது. தேர்வு ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1.20 மணி வரை தேர்வு நடந்தது.
இதில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த மாணவ, மாணவியர்கள் காலை 8:30 மணி முதல் தேர்வு மையத்தில் குவிந்தனர். காலை 9:50 மணி வரை மாணவ, மாணவியர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அரசு பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழ் மொழி, தனியார் பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில மொழி என இரண்டு மொழிகளில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் மொழியில் பயின்ற 121 பேர் உட்பட மொத்தமாக 597 மாணவ, மாணவியர்கள் மாதிரி 'நீட்' தேர்வில் பங்கேற்றனர்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
மாதிரி தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து செல்லவும், மொபைல் போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், பெல்ட் ஆகியவை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதேபோல், மாணவிகள் வளையல், தோடு, மூக்குத்தி, செயின், கயிறு, நகைகள், கொலுசு, ரப்பர் பேண்ட் ஆகியவை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் சென்ற மாணவ, மாணவிகளுக்கு, காலை 10.00 மணிக்கு வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., தாள் வழங்கப்பட்டன.
பால் பாயிண்ட் பேனாவினால் மாணவர்கள் விடைகளை குறித்தனர்.
சுய பரிசோதனை
'நீட்' தேர்வு குறித்து பயம் கலந்த குழப்பமான மனநிலையில் வந்த மாணவ, மாணவிகள் மாதிரி தேர்வு முடிந்த பிறகு, நீட் தேர்வு குறித்த புரிதலோடு உற்சாகமாக சென்றதை காணமுடிந்தது. இத்தேர்வின் வாயிலாக மாணவ, மாணவிகள் தாங்கள் எந்த நிலையில் உள்ளோம் என்பதை அறிந்து கொண்டனர். வெறும் மதிப்பெண்ணிற்காக படிப்பது 'நீட்' தேர்வுக்கு உதவாது என்பதையும், நிறைய கருத்துக்கள், சூத்திரங்கள், சமன்பாடுகளை படிப்பதோடு, அதனை 'அப்ளை' செய்து பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டனர். 'நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள நல்வாய்ப்பாக இந்த மாதிரி தேர்வு அமைந்தது என்றால் அது மிகையாகாது.
புதிய நம்பிக்கை
'தினமலர்' நடத்திய மாதிரி தேர்வு குறித்து மாணவர்கள் கூறுகையில், மாதிரி தேர்வு என்ற எண்ணம் மறைந்து, உண்மையான 'நீட்' தேர்வு எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
மாணவர்கள் நலனில் 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து அக்கறை காட்டி வருவது பாராட்டுதலுக்குரியது. இது போன்ற மாதிரி தேர்வை, 'தினமலர்' நாளிதழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும். தேசிய தேர்வு முகமையின் 'நீட்' தேர்வை தைரியமாக எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்ற உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் புறப்பட்டனர்.
தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இணையதளத்தில் ரிசல்ட்
நீட் மாதிரி தேர்வு தேர்வு முடிவுகள் இன்று 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு www.aktinstitutions.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
அல்லது 93611 65429 மற்றும் 63691 46590 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளையும், 'கீ ஆன்சரையும்' வாட்ஸ்-ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய அனுபவம்
'நீட்' தேர்வுக்காக தனியார் பள்ளிகள், கோச்சிங் சென்டர்கள், அரசு பள்ளிகள் மற்றும் ஆன்லைன் மூலமாக படிக்கும் மாணவ, மாணவிகள் இதுவரை பல்வேறு மாதிரி தேர்வுகளை எழுதியுள்ளனர். தங்களுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுடன் வகுப்பறையில் தேர்வு எழுதி வந்தனர். ஆனால், தேசிய தேர்வு முகமை நடத்தும் உண்மையான 'நீட்' தேர்வு போன்று, நேற்று நடந்த 'நீட்' மாதிரி தேர்வு மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது.
பிற பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு தேர்வினை ஆர்வமுடன் எழுதினர்.
'நீட்' மாதிரி தேர்வு எழுதுவதற்காக காலை 8.30 மணியளவில் இருந்து மாணவ, மாணவிகள் ஏ.கே.டி., பள்ளிக்கு வரத்தொடங்கினர்.மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலுடன் செல்வதை தவிர்க்க, 20 பேர் வீதம் வரிசையாக தேர்வு எழுதும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஒரு வகுப்பறையில் 20 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 2 ஆசிரிய, ஆசிரியைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

