/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்து கரும் அரளி செடிகள்
/
தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்து கரும் அரளி செடிகள்
ADDED : மே 03, 2024 11:52 PM

கள்ளக்குறிச்சி, - வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், முறையான பராமரிப்பில்லாததாலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரளி செடிகள் காய்ந்து, கருகி வருகிறது.
உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான 136 கி.மீ., தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதில், சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, அதில் அரளி செடிகள் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில், கார்பன் நச்சுக்கழிவு அதிகமாக இருக்கும்.
இந்த நச்சுக்கழிவை காற்றில் உறிஞ்சி, துாய ஆக்சிஜனாக மாற்றித்தரும் பண்பு இருப்பதால் அரளி செடி வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் வாகனத்தில் முகப்பு வெளிச்சம், எதிர்திசையில் வரும் வாகனத்தின் கண்ணாடியில் பிரதிபலிக்காமல் இருக்க அரளி செடிகள் வளர்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெயில் சுட்டெரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
சென்டர் மீடியனில் வளர்ந்துள்ள அரளி செடிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காததால், தண்ணீரின்றி அரளி செடிகள் காய்ந்து கருகி வருகிறது.
எனவே, சென்டர் மீடியனில் உள்ள அரளி செடிகளுக்கு தினமும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.