/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் ஆணையம் கெடுபிடி: வெறிச்சோடிய வார சந்தை
/
தேர்தல் ஆணையம் கெடுபிடி: வெறிச்சோடிய வார சந்தை
ADDED : ஏப் 07, 2024 06:07 AM

தியாகதுருகம், : தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு கெடுபிடி காரணமாக ரம்ஜான் பண்டிகை தருணத்தில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடந்திருக்க வேண்டிய தியாகதுருகம் வார சந்தை வெறிச்சோடியது.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தினமும் தொகுதி முழுதும் நடத்தப்படும் தீவிர சோதனையின் போது வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் பிடிபடுகிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை தியாகதுருகம் வார சந்தை நடந்தது. வழக்கமாக ஆடு, மாடுகள் விற்பனை இங்கு அதிக அளவில் நடைபெறும்.
குறிப்பாக ரம்ஜான் பண்டிகை இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் ஆடு, மாடு விற்பனை மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.
பணம் எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடு உள்ளதால் விற்பனை செய்வதற்கு விவசாயிகளும் அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் நேற்று தியாகதுருகம் வார சந்தை ஆடு, மாடுகள் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய வார சனிக்கிழமையில் 1000க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
நேற்று, தியாகதுருகம் வார சந்தைக்கு 260 மாடுகளும், 140 ஆடுகளும் மட்டுமே விற்பனைக்கு வந்தது. மொத்தம் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வர்த்தகம் நடந்தது.

