/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுகர்வோர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்: கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்
/
நுகர்வோர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்: கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்
நுகர்வோர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்: கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்
நுகர்வோர் கூட்டத்தில் நிர்வாகிகள் புகார்: கமிஷனர்கள் பங்கேற்க வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 07:40 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரமான உணவு வழங்கும் பொருட்டு உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நுகர்வோர் கூட்டத்தில் கமிஷனர்கள் பங்கேற்பதில்லை என நுகர்வோர் பாதுகாப்பு குழுகூட்டத்தில் நிர்வாகிகள் புகார் எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., சத்தியநாரயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கை மற்றும் புகார்கள் தெரிவித்து பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் ஆய்வு செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாட்டினை தடுக்க வேண்டும். டீ கடைகளில் கலப்பட டீ துாள் கொண்டு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சியில் போக்குவரத்து மிகுதியான முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். திருக்கோவிலுார் நகராட்சியில் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து எடுப்பதில்லை.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகள் சென்று வர போதிய பஸ் வசதியின்மையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மருந்து சீட்டுகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும். சிறுவங்கூர் மருத்துவமனை சாலைகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலைய கட்டண கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அரசம்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நுகர்வோர் குடிமக்கள் மன்றம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் உரிய அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காமல் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுவது போல் உள்ளது. குறிப்பாக நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்பதில்லை.
இதனையடுத்து, அடுத்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி கமிஷனர்களையும் பங்கேற்க செய்வது உள்ளிட்ட நுகர்வோர் அமைப்பினரின் அனைத்து புகார்கள் மற்றும் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.