/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
/
அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 05, 2024 06:52 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி சாகுபடி செய்து நிறைவான வருமானத்தை பெற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் பல்வேறு வேளாண் திட்டங்களை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிர் விதைப் பண்ணையினை பார்வையிட்டு சாகுபடி பரப்பு, பயிர் ரகம், விதைப்பு தேதி, விதைச் சான்று உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து சாகுபடியினை முறையாக மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பீளமேடு கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 0.50 ஹெக்டர் பரப்பளவில் ரூ.48,000 மானியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள டிராகன் பழம் சாகுபடி வயலினை பார்வையிட்டு சாகுபடி முறைகள், பணியாளர்கள் விவரம் மற்றும் ஊதியம், சாகுபடி காலம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டார்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளாண் திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிறைவான வருமானத்தை பெற முடியும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன் பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது வேளாண் இணை இயக்குநர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன். தோட்டக்கலைத் துணை இயக்குநர் சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.