ADDED : ஜூலை 22, 2026 05:21 PM
கச்சிராயபாளையம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி.... கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கச்சிராயபாளையம்: விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதால் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களில் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களுமே. இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழில்களையே நம்பி உள்ளனர்.
இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் அமைந்துள்ள கோமுகி அணை உள்ளது.
கோமுகி அணையின் பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணை கட்டுகள் உள்ளன. இந்த அணை கட்டுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதிய பாசன திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கச்சிராயபாளையம் பகுதிகளில் சம்பா, ஆனிகார், மாசிகார் என, மூன்ற போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதே போல் கச்சிராயபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருவதால் பெரும் பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கரும்பு அறுவடை செய்ய ஓராண்டு காலம் ஆவதாலும் ஆட்கள் பற்றாக்குறையால் கரும்பு அறுவடை காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பல விவசாயிகள் கரும்பு சாகுபடியை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் நெல், மரவள்ளி போன்றவற்றிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் லாபம் இன்றி பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல், மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் பலர் தங்கள் பயிர் சாகுபடிக்கு செய்த செலவு தொகைக்கே மகசூல் ஈடாகாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் பலர் நெல், கரும்பு போன்ற பயிர்களை தவிர்த்து மாற்று பயிர் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மக்காச்சோளம் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் ஒரு முக்கிய தானிய பயிராக உள்ளதால் கச்சிராயபாளையம் பகுதியில் விவசாயிகள் இதனை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மக்காச்சோளம் ஆடி, புரட்டாசி மற்றும் தை பட்டங்கள் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இந்த சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீரே போதமானது. மேலும் சொட்டு நீர் பாசனத்திற்கும் ஏற்ற பயிராக உள்ளது. 3 மாதங்களில் மக்காசோளம் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. சாகுபடி செவும் குறைவு என்பதால், மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்காச்சோளம் கால்நடை தீவனமாகவும், சமையல் எண்ணெய் தயாரிப்பிலும், பெரும் தொழிற்சாலைகளில் எத்தனால், ஸ்டார்ச், பிரீவர்ஸ், மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் தயாரிப்பிலும் முக்கிய மூல பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் மக்காச்சோளம் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் இடைதரகர்களிடம் ஏமாறாமல் தங்கள் மகசூலுக்கு ஏற்ப உரிய விலை கிடைக்கிறது.
மேலும் மக்காசேளம் கோழிப்பண்ணை மற்றும் கால்நடை தீவன தயாரிக்கவும் அதிகளவில் பயன்படுத்தவதால் வியாபாரிகள் பலர் விவசாய நிலத்திற்கு நேரில் வந்து அப்போதே பணத்தை கையில் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் மக்காச்சோளம் விற்பனை செய்வது எளிதாக உள்ளதுடன் உடனுக்குடன் பணம் கிடைப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை.
தற்போது 102 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மூட்டை ஒன்று 2 ஆயிரத்தி 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மக்காச் சோளம் சாகுபடி செய்வதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கச்சிராயபாளையம் பகுதியில் மக்காச்சேளம் சாகுபடி செய்யும் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
