/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதிகரிப்பு l மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு... l உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
அதிகரிப்பு l மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு... l உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிகரிப்பு l மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு... l உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிகரிப்பு l மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு... l உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2024 05:29 AM
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத ஏரி, குளங்கள் நிரம்பவில்லை.
கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக கோமுகி மற்றும் மணிமுத்தா ஆகிய இரு அணைகள் மட்டும் நிரம்பின. இருப்பினும் அடுத்தடுத்து மழை பெய்யாததால் அணை வறண்டது.
இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்று நீர் பாசனம் பாதிக்கப்பட்டது. ஆண்டு பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, மஞ்சள், மரவள்ளி ஆகியவை தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது.
தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை வெப்பம் சுட்டெரிக்கிறது. குறிப்பாக சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது.
இதனால் ஏரி, குளங்களில் குட்டை போல் தேங்கி இருந்த தண்ணீரும் வறண்டு கட்டாந்தரையாகிப் போனது.
இச்சூழ்நிலையில் குடிநீர் பஞ்சம் தலை துாக்கியுள்ளதால் பல ஊர்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தல் முடியும்வரை அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பிரச்னை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
அப்படி இருந்தும் ஒரு சில இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து வறட்சி அதிகரித்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் மணலுார்பேட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் போதிய அளவு தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.
வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் வறண்டதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்காமல் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

