வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகளுக்கு...ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்
வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகளுக்கு...ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்
UPDATED : ஆக 03, 2026 05:04 AM
ADDED : ஆக 02, 2026 05:31 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரிய ரக ஒட்டு பருத்தி(கிராசிங்) சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சு உற்பத்திக்கு தேவையான பருத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவரி மற்றும் இறவையில் சாகுபடி செய்யப்பட்டது. 'பஞ்சு' விற்பனைக்கு கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது.
இங்கு அதேபோல் 'விதை'யை நோக்கமாக கொண்டு பயிரிடப்படும் வீரிய ரக ஒட்டு பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்ய துவங்கினர். மாவட்டத்தில் 'பஞ்சு' மற்றும் விதை ஆகிய இரு முறையிலும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. 'பஞ்சு'க்காக சாகுபடி செய்யும் பருத்தியில், ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை கிடைத்தது.
சந்தையில் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக பஞ்சு உற்பத்திக்கான பருத்தி சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் பருத்தி வார சந்தைக்கும் 'பஞ்சு' வரத்து முற்றிலும் குறைந்து போனது.
இந்நிலையில், கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் விதையை நோக்கமாக கொண்டு சாகுபடி செய்யப்படும் வீரிய ரக ஓட்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் விதைகள், 4 குவிண்டால் பஞ்சுகள் என மொத்தம் 10 குவிண்டால் கிடைக்கிறது.
இதில் விதை ஒரு குவிண்டால் ரூ.40 ஆயிரம் வரையும், பஞ்சு ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விலை போகிறது. வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடிக்கு தனியார் விதை நிறுவனங்களே விதை, உரம், பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. தொடர்ந்து பஞ்சு விளைந்ததும் அதிலிருந்து விதை, பஞ்சுகளை தனியார் விதை நிறுவனங்களே நேரடியாக கொள்முதல் செய்கின்றன.
சேலம் மாவட்டம் ஆத்துார் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தனியார் விதை நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது. பருவ மழை குறைந்து நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்தும் பயிரிடப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அரசு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 700 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடி செய்யப்படுகின்றன.
வீரிய ரக ஒட்டு பருத்தி ஆண், பெண் செடிகள் என தனி தனியாக பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவு பெண் செடிக்கு, 20 சென்ட் அளவு ஆண் செடிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் ஆண் செடியில் இருந்து பூவை பறித்து மகரந்தத்தை பெண் செடி பூவில் தேய்த்து கிராசிங் செய்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 10 கூலி ஆட்கள் மூலம் நாள்தோறும் பருத்தி செடிகளில் 'கிராசிங்' செய்யப்படுகிறது. அப்போது தான் அதிக காய் உருவாகி மகசூல் அதிகரிக்கும். வீரிய ரக ஒட்டு பருத்தி சாகுபடியில் மனித உழைப்பு அதிகம் தேவை இருப்பினும், அதற்கேற்ப லாபமும் கிடைக்கிறது.
மாவட்டத்தில் வீரிய ரக ஓட்டு பருத்தி தற்போது ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டன. பஞ்சு உற்பத்திக்காக சாகுபடி செய்யும் பருத்தியை விட, அதிக லாபம் கிடைக்கூடிய வீரிய ரக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
