/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் திட்டம் முடக்கமா?
/
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் திட்டம் முடக்கமா?
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் திட்டம் முடக்கமா?
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் திட்டம் முடக்கமா?
ADDED : ஏப் 30, 2024 08:11 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் உயர் மட்ட பாலம் அமைக்கும் கடந்த ஆட்சியின் திட்டம் என்பதால் முடக்கப்பட்டதா என பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
திருக்கோவிலுாரையும், மணம்பூண்டியையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜரால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வலுவிழுந்துள்ளது.
சமீபத்தில் இந்த பாலம் புனரமைக்கப்பட்டாலும் அதிகரித்துள்ள போக்குவரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இல்லை. மாற்றாக அரகண்டநல்லுார் - திருக்கோவிலுாரை இணைக்கும் தரைப் பாலத்தின் அருகே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதனை ஏற்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என சட்டசபையில் வாக்குறுதி அளித்து, அதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விட தயாரான சூழலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசின் சார்பில் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ., வுமான பொன்முடியும் விரைவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதியை அவ்வப்பொழுது அளித்து வந்தார். ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
பக்கத்து தொகுதியான ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலுார் அருகே உள்ள கூவனுார் - சாங்கியம் கிராமத்தை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் புதிதாக சாலையை ஏற்படுத்தி 29.37 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு திட்டத்தை துவக்கி வைத்தார்.
சாலையே இல்லாத ஊருக்கு சாலை போட்டு, தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றுவோம் என அமைச்சர் வேலு கூறிவரும் நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள திருக்கோவிலுாரில் புதிய பாலம் கட்டுவதற்கான அவசியத்தை இந்த அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.
மாறாக கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கில் பாலம் அமைக்கும் திட்டத்தை இந்த அரசு முடக்கி இருக்கிறதா? என்ற சந்தேகத்தை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

