/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : ஏப் 25, 2024 04:08 AM

உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடந்தது.
காலை 6:00 மணிக்கு கூவாகம் கிராமத்தில் இருந்து கூத்தாண்டவர் சிரசு கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து நத்தம் கிராமத்தில் இருந்து கை, கால், கொடி, குதிரையும், கீரிமேடு கிராமத்தில் இருந்து புஜம், மார்பு, சிவிலியங்குளம் கிராமத்தில் இருந்து குடை, தொட்டி கிராமத்தில் இருந்து திருத்தேர் அச்சாணி கொண்டு வந்து பொருத்தி, 21 அடி உயர தேரினை தயார் செய்து பூக்களால் அலங்கரித்தனர்.
காலை 8:28 மணிக்கு தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேண்டுதல் கொண்ட பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரை நாணயங்களை சுவாமி மீது வீசி வழிபட்டனர். திருநங்கைகள் சூரை தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, கும்மியடித்து வழிபட்டனர்.
தொட்டி, நத்தம் கிராமம் வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடைந்தது. அங்கு நடந்த அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் தாலியை அறுத்தெறிந்து வெள்ளை புடவை கட்டி, விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பத் தொடங்கினர்.
மாலை 5:00 மணிக்கு பலி சாதம் படையல் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இரவு 7:00 மணிக்கு காளி கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டுவரப்பட்டு மலர்களால் அலங்கரித்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று 25ம் தேதி விடையாற்றி உற்சவம், நாளை 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி உளுந்துார்பேட்டை, விழுப்புரம், கடலுார், திருக்கோவிலுார், பண்ருட்டி உட்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை டி.ஐ.ஜி., திஷாமித்தல் ஆய்வு செய்தார்.

