ADDED : ஆக 21, 2026 03:50 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் பி.ஓ.எஸ்., இயந்திரம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட கவுரவ தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மகளிரணி தலைவி அமலா, துணைத் தலைவர்கள் நித்யா, மாலதி முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் 766 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக இணையதள சேவை குறைபாட்டாலும், பி.ஓ.எஸ்., இயந்திரம் அடிக்கடி பழுதாவதாலும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மாத விற்பனை சதவீதம் குறைவதாகவும் தெரிவித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க நிர்வாகிகள் சடையப்பிள்ளை, இளந்தென்றல், கலையரசன், ராஜேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
