/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகரை கடந்து செல்லும் கரும்பு வாகனங்களுக்கு தடை
/
விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகரை கடந்து செல்லும் கரும்பு வாகனங்களுக்கு தடை
விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகரை கடந்து செல்லும் கரும்பு வாகனங்களுக்கு தடை
விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை: நகரை கடந்து செல்லும் கரும்பு வாகனங்களுக்கு தடை
ADDED : பிப் 28, 2025 05:10 AM
கள்ளக்குறிச்சியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் நகரை கடந்து செல்கின்றன. இதனால், மாவட்ட தலை நகரமான கள்ளக்குறிச்சியில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கும் சமயங்களில் தியாகதுருகம், சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து ஏராளமான கரும்பு லோடு வாகனங்கள் நகருக்குள் நுழைந்து முக்கிய சாலைகளை கடந்து செல்கின்றன.
குறிப்பாக கலெக்டர், டி.எஸ்.பி., அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு, ஒன்றிய அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள காந்தி சாலையைக் கடக்கும் போது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கரும்பு வாகனங்கள் செல்லும் போது பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் முந்தி செல்வதற்கும், ஒன்றையொன்று கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
கரும்பு வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபடுத்தும் பொருட்டு கரும்பு வாகனங்கள் நகரைக் கடந்து செல்வதற்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கீடு செய்து கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8:00 முதல் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 8:00 மணி வரையிலம் கரும்பு வாகனங்கள் நகரைக் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நகரைக் கடந்து செல்லும் கரும்பு வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த 23ம் தேதி கச்சிராயபாளையம் சாலை க.மாமந்துார் பிரிவு சாலையில் கரும்பு டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன.
தொடர்ந்து நேற்று முன்தினம் காந்தி ரோடில் கரும்பு டிராக்டர் டிப்பர் மோதி மொபட்டில் சென்ற தாய், மகன் தலை நசுங்கி இறந்தனர். இதனால், நகரில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கரும்பு வாகனங்கள் நகரைக் கடந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதித்து மாற்று பாதையில் செல்ல வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதில் தியாகதுருகம் மார்க சாலையிலிருந்து வரும் வாகனங்கள் புறவழிச் சாலையில் சென்று கனியாமூர் வழியாக சர்க்கரை ஆலைக்குச் செல்ல வேண்டும்.
சங்கராபுரம் மார்க சாலையில் வரும் வாகனங்கள் ரோடுமாமந்துார் பிரிவு சாலை வழியாக மோ.வன்னஞ்சூர், சோமண்டார்குடி, மட்டிகைக்குறிச்சி வழியாக செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்தை காவல் துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.