/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'ஜகா' வாங்கிய அமைச்சர்கள் அதிருப்தியில் உ.பி.,கள்
/
'ஜகா' வாங்கிய அமைச்சர்கள் அதிருப்தியில் உ.பி.,கள்
ADDED : ஏப் 10, 2024 02:14 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தி.மு.க., அமைச்சர்கள் ஜகா வாங்கியதால், உடன்பிறப்புகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பிலும் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தொகுதியின் பொறுப்பை அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோரிடம் கட்சித் தலைமை ஒப்படைத்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அமைச்சர் வேலுவும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளுக்கு அமைச்சர் நேருவும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
இவர்கள் இருவருமே வேட்பாளர் மலையரசனை அறிமுகப்படுத்தும் கூட்டத்திற்கு வந்து நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி பேசியதோடு சரி. தொடர்ந்து கடந்த 30 ம் தேதி பெத்தநாயக்கன்பாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு தொகுதி பக்கம் இருவரும் தலை காட்டவில்லை.
அமைச்சர் நேரு தனது சொந்த மாவட்டமான திருச்சியிலும் தனது மகன் அருண் போட்டியிடும் பெரம்பலுாரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமைச்சர் வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் மட்டுமே நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பொறுப்பு அமைச்சர்களாக இருந்தும் கட்சியின் சீனியர்களான நேரு மற்றும் வேலு இருவரும் தொகுதி பக்கம் வராதது நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

