கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் சரியாக காலை 8 மணியளவில் 'ஸ்ட்ராங் ரூம்' தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 'ஸ்ட்ராங் ரூமினையும்' திறப்பதற்கு 25 நிமிடங்கள் ஆனது. இதையடுத்து 8.45 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
முதல் சுற்று முடிவு காலை 10 மணிக்கு தாமதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுக்கான முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டதால் மொத்தம் உள்ள 24 சுற்றுக்களில், மதியம் 3.20 மணிக்குள் 20 சுற்றுக்களின் முடிவுகள் மிக விரைவாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட முகவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு காலை, மதிய உணவும், தேநீர், தண்ணீர், பிஸ்கட் ஆகியவை தாமதமின்றி வழங்கப்பட்டது. இதனால் ஓட்டு எண்ணும் பணி தொய்வின்றி விறு, விறுப்பாக நடந்தது.
இயந்திரத்தில் கோளாறு:
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் 81 மற்றும் 224 ஆகிய இரண்டு பூத்களை சேர்ந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் பூத் எண் 151, ஆத்துார் தொகுதியில் பூத் எண் 224, கெங்கவல்லி தொகுதியில் பூத் எண் 96 ஆகிய இயந்திரங்கள் பழுதாகி செயல்படவில்லை. இதையடுத்து மற்ற பூத்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இறுதியாக, பழுதாகிய இயந்திரங்களில் வி.வி.பாட்., இயந்திரத்தில் இருந்த சீட்டுகளை கொண்டு ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது.