/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராஜேந்திரசோழன் கால கல்வெட்டு திருக்கோவிலுார் அருகே கண்டெடுப்பு
/
ராஜேந்திரசோழன் கால கல்வெட்டு திருக்கோவிலுார் அருகே கண்டெடுப்பு
ராஜேந்திரசோழன் கால கல்வெட்டு திருக்கோவிலுார் அருகே கண்டெடுப்பு
ராஜேந்திரசோழன் கால கல்வெட்டு திருக்கோவிலுார் அருகே கண்டெடுப்பு
ADDED : ஆக 04, 2024 10:20 PM

திருக்கோவிலுார்:கீழையூர் வீரட்டேஸ்வரர் கோவிலில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
திருக்கோவிலுார் அடுத்த கீழையூரில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இந்த கோவலில், செப்., 15ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளதால், கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, கோவிலில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட துண்டு கல் துாண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கல்வெட்டு குறித்து, ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், சிங்கார உதியன் தலைமையில், செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலையில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் இமானுவேல், அன்பழகன் ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது:
ஏழு துண்டுகளாக இருந்த கல் துாண்களில் சில எழுத்துக்கள் சிதைந்த நிலையிலும், சிற்பங்களும் உள்ளன. ஒரு துாணில் சிவனை வழிபடுவது போன்ற தோற்றத்தில் முனிவர் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. கலைந்து கிடந்த கல் துாண்களில் இருந்த எழுத்துகளை ஒன்றாக சேர்த்து படித்துப் பார்த்தபோது, மெய்கீர்த்திகளுடன் தொடங்கும் ராஜேந்திரசோழன் காலத்தை சேர்ந்த, 11ம் நுாற்றாண்டு கல்வெட்டு என தெரிகிறது.
மேலும், கோவிலுக்கு திருவிளக்கு எரிப்பதற்காக அரசங்குப்பம் அரசனந்தல், வழக்காடிகுப்பம், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய ஊர் பெயர்களும், மற்றும் பொன், பொருள் ஆகியவற்றை தானமாக வழங்கப்பட்டதும் தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆலய முதன்மை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, எழுத்தர் மிரேஷ்குமார், அஜய் உடனிருந்தனர்.