சித்தனுார் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
சித்தனுார் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 03, 2026 03:21 PM
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் மணிமுக்தா ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.
இங்குள்ள அம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். இதனால் ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும்.
தற்போது ஆடி மாதம் என்பதால் குலதெய்வ வழிபாட்டிற்காக தமிழகம் முழுதுமிருந்தும் பக்தர்கள் தினமும் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, பொங்கல் வைத்து, மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபடுகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவு இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் கழிவறை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.
அருகே உள்ள மணிமுத்தா ஆற்றை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பொங்கல் வைப்பதற்கு தேவையான சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக போதிய கழிவறை அமைத்துக் கொடுத்து மேல்நிலை நீர் தொட்டி கட்டி அதன் மூலம் சுத்தமான குடிநீரை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கையை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
