/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீலமங்கலம் புறவழிச்சாலையில் விதி மீறலால் விபத்து அபாயம்
/
நீலமங்கலம் புறவழிச்சாலையில் விதி மீறலால் விபத்து அபாயம்
நீலமங்கலம் புறவழிச்சாலையில் விதி மீறலால் விபத்து அபாயம்
நீலமங்கலம் புறவழிச்சாலையில் விதி மீறலால் விபத்து அபாயம்
ADDED : பிப் 24, 2025 01:17 AM

கள்ளக்குறிச்சி;
நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனை உடைத்து சாலையின் குறுக்கே பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புறவழிச்சாலை பகுதியில் ஏராளமான மெக்கானிக் பட்டறைகள், வீடுகள், தனியார் பள்ளிகள் உள்ளன. பொதுமக்கள் வாகனங்களில் புறவழிச்சாலையை ஒட்டி உள்ள ஏரிக்கரை வழியாக நீலமங்கலத்திற்கு செல்வது வழக்கம். இதற்கு அருகே நீலமங்கலம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் உள்ளது.
இருவழிச்சாலையாக இருந்த புறவழிச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டதால், சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலம் இறங்கும் பகுதியில் அதிவேகமாக வருவதால், சென்டர் மீடியன் நடுவே வழித்தடம் ஏற்படுத்தவில்லை. இதனால் புறவழிச்சாலையை குறுக்கே கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து வாகன ஓட்டிகள் அரை கி.மீ., துாரத்திற்கு சுற்றி சென்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் 'பைக்' செல்வதற்கேற்ப, சென்டர் மீடியன் தடுப்பை உடைத்துள்ளனர். இதனால் பைக்கில் செல்பவர்கள் ஆபத்தான முறையில் புறவழிச்சாலையை குறுக்கே கடக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததாலும், வாகனங்கள் அதிவேகமாக வருவதாலும் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. சென்டர் மீடியனில் உடைக்கப்பட்ட இடத்தை சரிசெய்வதுடன், அவ்வழியாக பைக்குகள் செல்வதை தடுக்க, சம்மந்தப்ட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ' என்றனர்.