/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடைகால பராமரிப்பு முறை கால்நடைத் துறை 'அட்வைஸ்'
/
கோடைகால பராமரிப்பு முறை கால்நடைத் துறை 'அட்வைஸ்'
ADDED : மே 06, 2024 03:50 AM
கள்ளக்குறிச்சி : 'கால்நடைகளுக்கான கோடைகால பராமரிப்பு முறைகளை செயல்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்' என கால்நடைத் துறை உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கால்நடைகளுக்கு கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். இல்லையெனில் கறவை மாடுகள் வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும். உயர் வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சியே, அசவுகரியம் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
நிழலில் தஞ்சம் புகுதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பசியின்மை, வேகமாக மூச்சுவிடுதல், உயர் உடல் வெப்பநிலை, வாய் திறந்த நிலையில் சுவாசித்தல், நடுக்கம் மற்றும் கீழே விழுதல் போன்றவைகளே கால்நடைகளில் வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்.
இந்த பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பாதுகாக்காக கோடைகால பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4, 5 முறையாவது குடிப்பதற்கு உகந்த குடிநீர் கொடுக்க வேண்டும்.
கறவை மாடுகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும். கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது மாடுகளின் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும். கொட்டகைகளில் உப்பு கட்டிகளை தொங்க விடுவதனால் கால்நடைகளின் தண்ணீர் பருகும் தன்மை அதிகரிக்கும் நீர்தெளிப்பான், மின்விசிறி அமைப்பது மூலம் கோடை வெப்ப அயர்ச்சியினைத் தவிர்க்கும். பால் உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும் செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும். கோடை காலங்களில் ஆடுகளுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளை தாதுஉப்பு கட்டிகள் கட்டி தொங்க விடுவதன் மூலம் அளிக்கலாம்.
ஒரு ஆடு 8 முதல் 12 லிட்டர் அளவிற்கு தினசரி நீர் அருந்தும். கோடைகாலங்களில் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெப்பத்தின் தாக்கம் குறைந்து இறப்பு, வளர்ச்சி குறைதல் போன்றவற்றை தவிர்க்க முடியும்.
கோடைக்காலங்களில் ஆடு, மாடுகளை காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலையில் 3:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
இதுபோன்ற கோடைக்கால கால்நடை பராமரிப்பு நடைமுறைகளை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுக வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.