/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
/
கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
ADDED : மே 28, 2024 06:23 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்களம் காலனியை சேர்ந்த துரை மகன் திருமாறன்,5; கடந்த 26ம் தேதி சிறுவன் திருமாறன் ஊரை ஒட்டியுள்ள விக்கிரமாதித்தன் என்பவரின் விளைநிலத்தில் விளையாட சென்றார். அப்போது பாசன கிணற்றில் மிதந்த பந்தை எடுக்க சிறுவன் திருமாறன் முயன்ற போது, தடுமாறி கிணற்றில் விழுந்து மூழ்கினார். அருகில் யாரும் இல்லாததால் சிறுவன் கிணற்றில் மூழ்கியது தெரியவில்லை.
ஒருநாள் முழுவதும் திருமாறன் கிடைக்காததால் தியாகதுருகம் போலீஸ்ஸ்டேனில் சிறுவனின் தாய் விந்தியா புகார் அளித்தார். அதன்பேரில், ராசிபுரத்தில் இருந்து நீர்மூழ்கி கேமிரா வரவழைக்கப்பட்டு, கிணற்றில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுவன் திருமாறன் உடல் நீருக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து, இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.