/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணையின் அக்கிரமிப்புகள் அகற்றி துார்வார... வேண்டும்; விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை தேவை
/
மணிமுக்தா அணையின் அக்கிரமிப்புகள் அகற்றி துார்வார... வேண்டும்; விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணையின் அக்கிரமிப்புகள் அகற்றி துார்வார... வேண்டும்; விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணையின் அக்கிரமிப்புகள் அகற்றி துார்வார... வேண்டும்; விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை தேவை
ADDED : செப் 16, 2024 06:36 AM

கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையின் எல்லைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அணையினை துார்வார வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஏதுமில்லை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருக்கிறது. இங்குள்ள பொதுமக்கள் விவசாயம், விவசாய கூலி வேலை, கால்நடைகள் மூலமாகவும் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர்.
மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய நீர்ஆதாரமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை உள்ளது.
இது தவிர பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான ஏரிகள், விவசாயம் மற்றும் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்கிறது.
இதில் கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 36 அடி உயரம் (796.96 மில்லியன் கனஅடி கொள்ளளவு) கொண்டது. பருவ மழை காலங்களில் கல்வராயன்மலையில் பெய்யும் மழைநீர், மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. இதுதவிர மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பதன் மூலம் புதிய மற்றும் பழைய பாசனத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,496 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இதுதவிர அணையில் இருந்து தண்டலை, பெருவங்கூர், பல்லகச்சேரி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதுடன், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. அதேபோல், ஆறு வழியாக தண்ணீர் செல்லும் போது தடைப்பணைகள் நிரம்பி வழிந்தோடும்போது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில் மணிமுக்தா அணையின் எல்லைப்பகுதியை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்த வண்ணம் உள்ளது. மழைக்காலங்களில் அணை முழு கொள்ளளவை எட்டினாலும், கோடைக்காலம் துவங்கும் முன்னரே வற்றி விடுகிறது. அணை விரைவில் வறண்டுபோவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகில் உள்ள கிணறு, ஏரிகளில் தண்ணீர் குறைகிறது.
இதனால் கோடைக்காலங்களில் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களுக்கும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, அணையின் எல்லைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அணையினை ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.