/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய பலி சம்பவத்தில் கைதான இருவர் மேலும் ஒரு வழக்கில் கைது
/
கள்ளச்சாராய பலி சம்பவத்தில் கைதான இருவர் மேலும் ஒரு வழக்கில் கைது
கள்ளச்சாராய பலி சம்பவத்தில் கைதான இருவர் மேலும் ஒரு வழக்கில் கைது
கள்ளச்சாராய பலி சம்பவத்தில் கைதான இருவர் மேலும் ஒரு வழக்கில் கைது
ADDED : பிப் 28, 2025 05:47 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி வழக்கில் கைதான இருவரை, மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கில் கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ்,48; அவரது சகோதரர் தாமோதரன்,40; உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை தற்போது சி.பி.ஐ., விசாரிக்கிறது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த நிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு,70; பெங்களூருவில் மரசிற்ப வேலை செய்து வந்த இவர், கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி சின்னசேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன் பள்ளிவாசல் அருகே இறந்து கிடந்தார். உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்தனர்.
அவரது மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் ஜூன் 21ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில், தங்கராசு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்தது தெரிந்தது.
இதனையடுத்து தங்கராசு இறந்த வழக்கில் கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது தற்போது வழக்கு பதிவு செய்தனர்.
கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரையும் நேற்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரசுதன், இருவரையும் வரும் 4ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் முந்தைய வழக்கில் கைதான மெத்தனால் சப்ளையர்கள், பதுக்கி வைத்தவர்கள் மீண்டும் இந்த வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.