/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பராமரிப்பில்லாத கோமுகி அணை பூங்கா
/
பராமரிப்பில்லாத கோமுகி அணை பூங்கா
ADDED : மார் 07, 2025 07:04 AM

கச்சிராயபாளையம் : கோமுகி அணையில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள பூங்காவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வராயன்மலை அடிவாரத்தில், கோமுகி அணை அமைந்துள்ளது.மொத்தம், 900 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணை 46 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் புதிய பாசன திட்டத்திற்கு 8,917 மீட்டர் துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணையில் பல்வேறு சிலைகள், காட்சி மேடைகள், மற்றும் கண்கவர் பூங்கா ஒன்றும் ராக்கெட் வடிவமைப்புடன் அமைக்கப்பட்டன. கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் கோமுகி அணையில் தேங்குகிறது.
இந்த மலையில் பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுாரில் படகுதுறை, சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் ஆகியவை உள்ளன.
தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அணையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. பூங்காவும் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் குற்ற சம்பவங்கள் நடக்கும் இடமாகவும் மாறி உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.