/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ADDED : ஜூலை 04, 2024 02:31 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 48, மாற்றுத்திறனாளி. இவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பூர்வீக சொத்து, 37 சென்ட் இடம், சிறுவங்கூர் கிராம எல்லையில் உள்ளது.
இந்த இடத்தை, சக்திவேல் உட்பட அவரது சகோதரர்கள் மூவர், 2013ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து கொண்ட நிலையில், பட்டா மாற்றம் செய்ய முடிவெடுத்தனர்.
இதற்காக, சக்திவேல், ஜூலை 1ல் ஆன்லைனில் விண்ணப்பித்து, சிறுவங்கூர் வி.ஏ.ஓ., சம்பத் என்பவரை சந்தித்தார். அப்போது, வி.ஏ.ஓ., பட்டா மாற்றம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து சக்திவேல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று காலை சிறுவங்கூர் இ - சேவை மையத்தில் இருந்த இடைத் தரகர் மூலம் சக்திவேல் கொடுத்தார்.
அந்த பணத்தை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சம்பத் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்பத் மற்றும் இடைத்தரகர் சிறுவங்கூரை சேர்ந்த பிரவீன்குமார், 23; ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.